சிபிஎஸ்இ அறிமுகம் செய்த “தமன்னா” தேர்வு

சிபிஎஸ்இ மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை திட்டமிட தமன்னா என்ற திறனறித் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தமன்னா தேர்வு என்றால் என்ன என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.

என்சிஇஆர்டி மற்றும் சிபிஎஸ்இ இணைந்து உருவாக்கியுள்ள திறனறி தேர்வுக்கு தமன்னா என பெயரிடப்பட்டுள்ளது.

TRY AND MEASURE APTITUDE AND NATURAL ABILITIES என்பதன் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் TAMANNA என்ற சுருக்கம்.

இத்தேர்வு மூலம் மொழித்திறன், பகுத்தறிவு, வாய் மொழித் திறன், எண் திறன், கண்ணோட்டத்திறன் உள்ளிட்ட ஏழு தலைப்புகளில் மாணவர்கள் சோதித்து பார்க்கப்படுவர்.

ஒவ்வொரு தலைப்பிலும் தலா 30 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு தலைப்பிற்கும் 10 நிமிடங்கள் என எழுபது நிமிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

எவ்வளவு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதற்கு தனியாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இதில் வெற்றி, தோல்வி என்ற நிலை இல்லாமல் அதிகம், சராசரி, குறைவு என்ற மூன்று நிலைகள் வழங்கப்படும்.

ஏழு தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் மாணவர்கள் பெரும் மதிப்பைப் பொறுத்து உயர்கல்வியில் அவர் எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

உதாரணமாக எண் திறன், பகுத்தறிவு, கண்ணோட்டத்திறன் தலைப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் வங்கித் துறையை தேர்வு செய்யலாம்.

மொழித்திறன், வாய்மொழித்திறன், பகுத்தறிவுத் திறன், எண் திறன் கொண்டவர்கள் பத்திரிகையாளர் ஆகலாம் என கூறப்பட்டுள்ளது.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

7 தலைப்புகளைக் கொண்ட தமன்னா தேர்வை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தும் வகையில் தேர்வு புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியாக 17 ஆயிரத்து 586 மாணவர்களுக்கு இத்தேர்வை ஏற்கனவே சிபிஎஸ்இ நடத்தியுள்ளது.

இந்த தமன்னா தேர்வு கட்டாயமில்லை என்றும் இதனை எழுதச்சொல்லி மாணவர்களை பெற்றோரோ, ஆசிரியரோ கட்டாயப்படுத்த கூடாது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மேலும் தாம் எதில் திறன் கொண்டவர்களாக இருக்கிறோம் என அடையாளப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தமன்னா தேர்வின் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே