தாலியால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை.!! கணவன் தலைமறைவு..!!

பூந்தமல்லியில் தாலியால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கணவனை போலீஸார் தேடி வருகிறார்கள்.

பூந்தமல்லி கிழக்கு மாட வீதி, ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (30). வேன் டிரைவர். இவரது மனைவி நந்தினி (27), இவர்களுக்கு 1 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது சொந்த ஊர் பண்ருட்டி. கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இவர்கள் இந்த வீட்டின் மாடியில் வாடகைக்கு குடி வந்துள்ளனர். கீழ் வீட்டில் நந்தினியின் சகோதரி பவித்ரா என்பவர் குடியிருந்து வருகிறார்.
வெளியே வரவில்லை

நேற்று இரவு நந்தினி மற்றும் குழந்தைகளை பவித்ரா கடைசியாக பார்த்துள்ளார். இந்த நிலையில் இன்று மாலை வரை நந்தினி வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. வீடும் பூட்டப்பட்டு இருந்துள்ளது. பல முறை அழைத்தும் வீட்டிற்குள் இருந்து எந்தவித பதிலும் இல்லை.

பூந்தமல்லி

இதனால் சந்தேகம் அடைந்த பவித்ராவும் அக்கம், பக்கத்தினரும் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நந்தினி தாலியால் கழுத்தை இறுக்கியும், கட்டையால் தாக்கியும் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பிரேத பரிசோதனை

இதையடுத்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே 3 குழந்தைகளுடன் தலைமறைவான கணவன் ஆனந்தராஜை போலீசார் தேடி வருகின்றனர். குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவியை தாலிக்கயிற்றால் இறுக்கியும், உருட்டுக்கட்டையால் தாக்கியும் ஆனந்தராஜ் கொலை செய்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆனந்தராஜ் பிடிபட்டால்தான்

தலைமறைவாக உள்ள ஆனந்தராஜ் பிடிபட்டால் தான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக பெரும்பாலானவர்களுக்கு சகிப்புத்தன்மையும் பொறுமையும் குறைந்து விடுகிறது. இதனால் சிறிய பிரச்சினைகளுக்கெல்லாம் கொலை செய்வது, தாக்குதல் நடத்துவது என தொடங்கிவிட்டனர்.

நண்பர்களுக்குள் தாக்குதல்

மதுபான கூடத்தில் தகராறு ஏற்பட்டு நண்பர்களுக்குள் தாக்குதல் நடத்திக் கொள்வது, திருமணம் செய்து வைக்கவில்லை என கூறி தற்கொலை, குடிக்க பணம் தரவில்லை என கூறி ஆத்திரத்தில் கொலை செய்வது, மனைவி கோழிக் குழம்பு வைக்கவில்லை என கூறி தாக்குவது, மனைவி தாமதமாக டவல் எடுத்து வந்ததால் ஆத்திரத்தில் கணவன் கொலை செய்தது என நிறைய விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே