காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தில்லியில் முழுப் பொதுமுடக்கத்தை அமல்படுத்த தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தில்லி அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவிலான வாகனங்கள் இயக்குவதால் மற்றும் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் சமீபகாலமாக காற்று மாசு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காற்று மாசு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணையின்போது, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முழுப் பொதுமுடக்கத்தை அமல்படுத்த தயாராக இருப்பதாக தில்லி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிபதிகள் பேசுகையில், முழுப் பொதுமுடக்கத்தை தில்லி புறநகர் பகுதிகளான அண்டை மாநிலங்களிலும் அமல்படுத்தினால் மட்டுமே காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும் எனப் பரிந்துரை செய்துள்ளது.
இதற்கிடையே, மத்திய அரசுத் தரப்பில் தெரிவித்திருப்பதாவது, வடமாநிலங்கள் பயிர்க்கழிவுகள் எரிப்பதால் தில்லியில் 10 சதவீதம்தான் காற்று மாசு ஏற்படுகிறது. மேலும், காற்று மாசை கட்டுப்படுத்த ஒருநாள்விட்டு ஒருநாள் வாகனம் இயக்கும் திட்டம், தில்லிக்குள் நுழைய கண்டெய்னர் லாரிகளுக்கு தடை மற்றும் கடுமையான பொதுமுடக்கம் ஆகிய மூன்று பரிந்துரைகளை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.