இன்னும் எத்தனை எத்தனை உயிர்களை பலி வாங்க துடிக்கிறீர்கள்? – உயர்நீதிமன்றம்

சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில், இன்னும் எத்தனை உயிர்களை அரசும், அதிகாரிகளும் காவு வாங்கப் போகிறார்கள், இன்னும் எவ்வளவு ரத்தத்தை உறிஞ்ச நினைக்கிறார்கள் என்று உயர்நீதிமன்றம் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில், நீதிமன்றம், அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அரசியல் கட்சிக் கொடிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர்.

சென்னை பள்ளிக்கரணையில், டிஜிட்டல் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் குறித்து, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் வழக்கறிஞர்கள் லட்சுமி நாராயணன், கண்ணதாசன் முறையிட்டனர்.

அப்போது பேனர்கள் வைப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் உரிய முறையில் பின்பற்றுவதில்லை, மெத்தனமாக உள்ளனர் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

தலைமை செயலகத்தை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றுங்கள் என மட்டும் தான் தாங்கள் உத்தரவிடவில்லை எனக் கூறிய நீதிபதிகள், ஏராளமான உத்தரவுகள் பிறப்பித்தும் பலனில்லை என்றும் தெரிவித்தனர். இதற்காக அரசின் நிர்வாகத்தை தாங்கள் நடத்த முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

ஆளும் கட்சியினர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் சட்ட விரோத பேனர்கள் வைப்பதாக கூறிய நீதிபதிகள், மக்களின் ரத்தத்தை உறிபவர்கள் போல அரசு அதிகாரிகள் உள்ளனர் என்றும் கண்டித்தனர்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான் என்றும், அதிகாரிகள் ஆளுங் கட்சியின் முகவர்களாக மாறுகின்றனர் என்றும் கண்டனம் தெரிவித்தனர்.

விபத்து ஏற்படும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு மட்டும் அளித்து அதிகாரிகள் பிரச்சினையை முடித்துக் கொள்கிறார்கள் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

சட்டவிரோத பேனர் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு உள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார். பின்னர் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில், அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனை நோக்கி, நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். சட்டவிரோத பேனர்களை அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள், நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகளால் ஏன் அமல்படுத்த முடியவில்லை என நீதிபதிகள் கேட்டனர்.

சட்டவிரோத பேனர்களுக்கு அரசியல் கட்சியினரே பெருமளவு காரணம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கிடா வெட்டு, காது குத்து போன்ற சொந்த நிகழ்ச்சிகளுக்குகூட பேனர் வைத்தால்தான் அமைச்சர்கள் விழாவுக்கு வருவார்களா?? என தமிழிலேயே கேள்வி எழுப்பினர்.

பேனர்கள் வைக்காவிட்டால், அமைச்சர்களுக்கு வழிதெரியாமல் போய்விடுமா, இல்லை அமைச்சர்கள் தொலைந்து போய்விடுவார்களா என்றும் நீதிபதிகள் வினவினர்.

நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, விதிமீறல் பேனர்கள் முன்கூட்டியே வைக்கப்படும்போது அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என கேட்ட நீதிபதிகள், பொது சாலையை ஆக்கிரமித்தும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பேனர்கள் வைக்கப்படும்போது கூட ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என கேள்வி எழுப்பினர்.

சட்ட விரோத பேனர்கள் விவகாரத்தில் எத்தனை உத்தரவுகள் போட்டாலும் அரசு செயல்படுத்துவதில்லை என தலைமை வழக்கறிஞரிடம் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அரசின் மீதான நம்பிக்கையை நீதிமன்றம் இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டனர். இன்னும் எத்தனை உயிர் பலிகளை அரசும், அதிகாரிகளும் எதிர்பார்க்கிறீர்கள், இன்னும் எவ்வளவு ரத்தத்தை உறிஞ்ச நினைக்கிறீர்கள் என நீதிபதிகள் காட்டமாக கேட்டனர்.

ஜனநாயக நாட்டில் உயிர்களுக்கு ஒரு சதவீதம் கூட மதிப்பு இல்லையா?? அவ்வளவு கேவலமாக போய்விட்டதா?? என கடுமையாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பிள்ளைகளின் ரத்தத்தின் மீது நின்று அரசியல் செய்வதாக குறிப்பிட்டனர்.

இத்தனை சென்சிட்டிவான பிரச்சனையின் முக்கியத்துவத்தை அதிகாரிகள் ஏன் உணராமல் இருக்கிறீர்கள் எனவும் நீதிபதிகள் வினவினர். உயிர்ப் பலி ஏற்படும்போது இழப்பீடு, கருணைத் தொகை தந்துவிட்டால் போதுமா, அது போன உயிரை மீட்டுத் தருமா என்றும் நீதிபதிகள் கேட்டனர்.

ஏற்கெனவே கோவையில் நடைபெற்ற சம்பவம் போலவே நேற்றைய சம்பவமும் நடைபெற்றுள்ளது என்றும், அதேபோல ஒருவர் மீது வழக்கு பதிவு செய்துவிட்டால் போதுமா?? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகளின் கேள்விக் கணைகளாலும், கண்டனங்களாலும் அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அரசியல் கட்சிக் கொடிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பிற்பகலில் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். இதனிடையே, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மெரினா கடற்கரை சாலையில் உள்ள கொடிகள் அகற்றப்பட்டன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே