கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு துணி எடுத்துத் தைப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருக்கிறது. காரணம் என்ன??
இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. பட்டாசு, இனிப்பு ஆகியவற்றுடன் புத்தாடையும் இந்த பண்டிகையில் இன்றியமையாத ஒன்றாகும்.
பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு துணி வாங்கி கொடுத்தால்தான் தீபாவளிக்கு முந்தைய நாளாவது டைலர் கடையிலிருந்து தைத்த துணியை வாங்க முடியும் என்கிற சூழல் ஒரு காலத்தில் இருந்தது.
இதனால் ஜவுளி கடைகளுக்கு இணையாக டைலர் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இன்றோ நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. ரெடிமேட் ஆடைகளின் வரவால் பண்டிகை காலத்தில் கூட டெய்லர் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
ஆடை அலங்காரங்களில் ஆண்களைவிட பெண்களே அதிகம் கவனம் செலுத்துவார்கள் என்பதால் அவர்களுக்கான உடை தைப்பதற்கு பெண் தையல் கலைஞர்களின் தேவை அதிகரித்தது.
இதனால் சுய தொழிலாக தையல் கடை தொடங்கிய பல பெண்களும் இந்த ரெடிமேட் ஆடைகளின் வருகையால் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
ரெடிமேட் ஆடைகள் இன் வரவு ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் ஆன்லைன் ஷாப்பிங்கும் தையற் கலைஞர்களின் வாழ்வாதார இழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்த சூழலில், துணி ஆல்ட்ரேஷன் பணிகளுக்கு மட்டுமே தங்களை நாடுவதாக டைலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காஜா பட்டன் தைத்து காத்திருந்து டெய்லர் வேலையைக் கற்றுக் கொண்டு பல வருடங்கள் டைலராக இருந்து சிலருக்கு வேலை கொடுத்து வந்த நிலையில், ஆன்லைன் வர்த்தகம் தங்களது அடிமடியில் கை வைத்திருப்பதாக ஆதங்கப்படுகின்றனர் தையல் கடை உரிமையாளர்கள்.