தமிழகத்தில் முதன்முறையாக 1974 இல்தான் காவல் துறையில் பெண்கள் சேர்க்கப்பட்டனர். திமுக ஆட்சி நடைபெற்றுவந்த அந்தக் காலத்தில் சென்னை மாநகரக் காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

பெண் துணை ஆய்வாளர், தலைமைக் காவலர், 20 பெண் காவலர்கள் இப்படிச் சேர்க்கப்பட்டார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் மகளிர் காவல் படைகள் உருவாக்கப்பட்டன.

ஆனால், 1992 இல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது காவல் துறையில் புதிய அத்தியாயம் தொடங்கியது. நாட்டுக்கே முன்னோடியாக அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது.

ஒரு பெண் காவல் ஆய்வாளர், 3 பெண் துணை ஆய்வாளர்கள், 6 பெண் தலைமைக் காவலர்கள், 24 பெண் காவலர்களால் அந்தக் காவல் நிலையம் நிர்வகிக்கப்பட்டது. படிப்படியாக மாநிலம் முழுவதும் இந்தக் காவல்நிலையங்கள் விரிவுபடுத்தப்பட்டன.

பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டே அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் சிறப்புக் கவனம் செலுத்துவதே இதன் முக்கிய நோக்கம். பாலியல் சார்ந்த புகார்களை ஆண் காவலர்களிடம் பெண்கள் தெரிவிப்பது கடினமாக இருக்கும் என்கிற எண்ணத்திலும் இந்தக் காவல் நிலையங்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் 222 (சென்னையில் 31 உள்பட) அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடங்கி பெண் காவலர்கள் வரை 20,859 பேர் பணியாற்றிவருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே