நாங்குநேரி விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து எச்சன்குப்பத்தில் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் அனுமதிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
பதவியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நீட் தேர்வை எதிர்க்கவில்லை என்று அவர் விமர்த்தித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை வேண்டுமென்றே நடத்தாமல் இருந்து வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவு கேட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அதிமுக வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு, வாக்காளர்களை விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.
நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்துக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக அரசு மீது திமுக கூறும் குற்றச்சாட்டுகள் ஒருபோதும் எடுபடாது என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
நாங்குநேரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ராஜ நாராயணன் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.
கருவேலங்குளம், களக்காடு பகுதியில் வாக்கு சேகரித்த அவர், திமுக அதிமுகவினர் ஓட்டுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டினார்.
இதேபோன்று நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட சிறுமளஞ்சி, ராஜபுதுக்குடி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பனங்காட்டு படை கட்சி வேட்பாளர் ஹரி நாடார் வாக்கு சேகரித்தார்.
பத்துக்கு மேற்பட்ட கார்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அவர், களக்காட்டில் உள்ள காமராஜர் சிலை முன்பு இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.