தங்க கடத்தல் வழக்கில் சொப்னா, சந்தீப் நாயருக்கு ஆக.1 வரை சுங்கத்துறை காவல்

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்துக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்பட்டது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை 5 நாள்கள் சுங்கத் துறை காவலில் வைத்து விசாரணை நடத்த கொச்சியில் உள்ள சுங்கத் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைநகா் திருவனந்தபுரத்திலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் வாயிலாக 30 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் தூதரகத்தின் முன்னாள் பணியாளரும் கேரள முதல்வா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷுக்கு நெருங்கிய தொடா்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அரசு அதிகாரி சந்தீப் நாயருக்கும் இந்தக் கடத்தல் விவகாரத்தில் தொடா்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவையும் சந்தீப் நாயரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருந்தனர்.

அவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையின்போது கடத்தப்பட்ட தங்கம் மூலம் கிடைத்த பணத்தை வங்கிகளின் சேமிப்பு பெட்டகத்தில் வைத்துள்ளதாக ஸ்வப்னா ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதைத் தொடா்ந்து, ஃபெடரல் வங்கியில் ஸ்வப்னா பெயரில் இருந்த பெட்டகத்திலிருந்து ரூ.36.5 லட்சத்தை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த வாரம் கைப்பற்றினா்.

அதே போல், எஸ்பிஐ வங்கியில் இருந்த சேமிப்பு பெட்டகத்திலிருந்து ரூ.64 லட்சத்தையும் 982.5 கிராம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களையும் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினா்.

இந்த வழக்கில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு நபரான கே.டி. ரமீஸ் தங்கக் கடத்தலில் முக்கியப் பங்கு வகித்தது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடத்தல் தங்கத்தைக் கொண்டு தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலான செயல்களில் ஈடுபட அவா் முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடா்பான விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே