பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை 5 மணி முதல் உபரி நீர் திறப்பு..!!

இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரி திறக்கப்படுகிறது. 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய் தொடங்கி வியாழன் வரை கனமழை பெய்த காரணத்தால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வந்தது.

சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரி அண்மையில் 22 அடியை எட்டிய நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டது.

இதனிடையே பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. 

தொடர் மழையாலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர், அம்மம்பள்ளி அணையிலிருந்தும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்தது.

ஏற்கெனவே பூண்டி ஏரிக்கான வரத்துக் கால்வாய் மூலம் மழைநீரும், கிருஷ்ணா கால்வாயில் நீர் வந்தது. ஏரியில் நீர் இருப்பு அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் புதன்கிழமை நிலவரப்படி 1,842 மில்லியன் கன அடியாக இருந்தது நீர் இருப்பு, பிற்பகலில் 1,872 கன அடியாக உயர்ந்தது.

பூண்டி ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மணல் மூட்டைகள் மற்றும் மூங்கில் கம்புகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இந்நிலையில் பூண்டி ஏரியில் நீர் இருப்பு 33 அடியை நெருங்கி உள்ளது.

வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் நீர்மட்டம் மேலும் உயரும் என்பதால் இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் இன்று மாலை தண்ணீர் திறக்கப்படுவதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே