நானும் எனது மகளும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளோம் – மெஹ்பூபா முஃப்தி

தான் மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மகளுடன் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் மெகபூபா முப்தி பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பிற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோர் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.

இதில், ஃபருக் அப்துல்லா எம்.பியாக இருப்பதால் திமுக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ‘நாடாளுமன்றத்தில் இங்கு கேள்வி கேட்கவேண்டிய எங்கள் நண்பர் எங்கே?’ என்று குரல் கொடுத்தனர்.

அதன்பிறகு, அவர் ஏழு மாத வீட்டுக்காவலுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஃபருக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார்.

அவரைப் போலவே அவரின் மகன் உமர் அப்துல்லாவும் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால், மெகபூபா முப்தியை விடுவிப்பது குறித்து எந்த முடிவையும் காஷ்மீர் நிர்வாகம் எடுக்கவில்லை.

அவரை மேலும் 7 மாதங்கள் வீட்டுக் காவலில் வைத்தது அரசு. மெகபூபா முப்தியின் சொந்த மகள்கூட தனது தாயை பார்ப்பதற்கு உச்ச நீதிமன்ற அனுமதி பெற்றே பார்த்தார்.

இந்நிலையில்தான் கடந்த மாதம் 13ம் தேதி 14 மாத காவலுக்குப் பிறகு மெகபூபா முப்தி விடுதலை ஆனார்.

விடுதலைக்குப் பிறகு காஷ்மீர் மக்களை சந்தித்து வருகிறார் முப்தி. மேலும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்க மற்ற கட்சிகளுடன் இணைந்து போராடி வருகிறார்.

இந்நிலையில், தற்போது “நான் மீண்டும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். கடந்த இரண்டு நாட்களாக, புல்வாமாவில் உள்ள வாகீத் பராவின் குடும்பத்தினரை சந்திக்க ஜம்மு – காஷ்மீர் நிர்வாகத்தால் நான் அனுமதிக்கப்படவில்லை.

பாஜக அமைச்சர்களும் அவர்களது கைப்பாவைகளும் காஷ்மீரின் ஒவ்வொரு மூலையிலும் சுற்ற அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் எனது விஷயத்தில் பாதுகாப்பு ஒரு பிரச்னை.

அவர்களின் கொடுமைக்கு எல்லையே இல்லை. வஹீத் ஆதாரமற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

அவரது குடும்பத்தினரை ஆறுதல்படுத்தக் கூட எனக்கு அனுமதி இல்லை. எனது மகள் இல்டிஜா கூட வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார், ஏனெனில் அவர் வாகீத்தின் குடும்பத்தினரையும் பார்க்க விரும்பினார்.

இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறேன். அப்போது அனைத்தையும் தெளிவாக கூறுகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

முப்தி குறிப்பிட்ட வாகீத் பராவ்வை ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி நவீத் பாபு சம்பந்தப்பட்ட பயங்கரவாத வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) புதன்கிழமை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே