சபரிமலை, ரபேல் தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு, ரபேல் விமானம் கொள்முதல் தொடர்பான வழக்கு ஆகியவற்றின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி அளித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த அமர்வில் இடம்பெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட கருத்து கொண்டிருந்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்த முயன்றபோது பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின.

இதையடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

4 புதிய ரிட் மனுக்கள் 65 மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் ஃபாலி நாரிமன், கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை மேற்கொண்டது.

சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரள அரசு என பலதரப்பினரும் இந்த வழக்கில் வாதங்களை முன்வைத்தனர்.

அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து இதற்கான தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.

9 மாதங்களுக்குப் பிறகு இன்று அந்த தீர்ப்பு வெளியாகிறது.

சபரிமலையில் வரும் 17ம் தேதி மகரவிளக்கு வழிபாடு தொடங்க உள்ள நிலையில், இன்றைய தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று ரஃபேல் வழக்கின் மேல்முறையீட்டிலும் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த விமான பேரத்தில் விலை நிர்ணயம் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.

இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த கோரி 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றம் 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண்ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட பலர் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு கடந்த மே மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

இதனிடையே, ரஃபேல் வழக்கில் காவலாளியே திருடன் என்று கூறிய ராகுல்காந்தி மீது பாஜக எம்பியான மீனாட்சி லேகி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கிலும் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே