திருமண நிகழ்ச்சிகளுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படும் முழு பொதுமுடக்கத்தில் தளர்வு கோரிய வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

இதனால், உணவகங்களை நம்பி வெளியூரில் வேலை செய்பவர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் கடந்த மார்ச் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின் காரணமாக அப்போது நடைபெறவிருந்த திருமணங்கள் அனைத்தும், ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டன. 

ஆகஸ்ட் 21, 23, 24, 28, 30, 31 ஆகிய தேதிகளிலும், செப்டம்பர் 4, 14, 16 ஆகிய தேதிகளிலும் நல்ல முகூர்த்த நாட்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், திங்கள்கிழமைகளில் திருமணங்களை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

திருமணம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு சிறப்பு அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும்.

சுபநிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதற்காக வாகன போக்குவரத்துக்கு அனுமதியளிக்கும் வகையில் பொதுமுடக்கத்தில் தளர்வு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.

அப்போது, பொதுமுடக்கம் தொடர்பாக வரும் 29-ஆம் தேதி முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது.

எனவே இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது? என்பதை பொருத்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே