டெல்லியில் வசிக்கும் 29 வயதான ஜோதி என்ற பெண் தனது கணவன் செல்போன் வாங்கி தர மறுத்து விட்டதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் பலரும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
சில பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் வசிக்கும் 29 வயதான ஜோதி என்ற பெண் தனது கணவன் செல்போன் வாங்கி தர மறுத்து விட்டதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகளின் பள்ளியில் ஆன்லைன் வகுப்பு நடத்துவதால், ஸ்மார்ட் போன் வாங்கி தருமாறு மனைவி கேட்டுள்ளார்.
ஆனால் இதற்கு கணவன் மறுப்பு தெரிவித்ததாகவும், ஊரடங்கு முடிந்த பிறகு வாங்கி தருவதாக கூறியதாகவும் தெரிகிறது.
இதனால் கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து மன உளைச்சல் அடைந்த ஜோதி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.