சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் சேலத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார். தனது வீட்டை அபகரித்துக் கொண்டு காலிசெய்ய மறுப்பதாக வீட்டு உரிமையாளர் ஆஷாகுமாரி என்பவர் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, தங்களது வீட்டை அபகரிக்க திட்டமிட்டு மிரட்டி வருவதாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பியூஸ் மானுஷ். இவரது பெற்றோர் சேலத்துக்கு தொழில் புரிய வந்த நிலையில் இவர் தமிழகத்தில் பிறந்துள்ளார்.

சேலம் கொண்டப்ப நாயக்கன் பட்டியில் வசிக்கும் இவர் சேலம் குரல் கொடு, சேலம் மக்கள் குழு என்ற அமைப்புகளை தொடங்கி நடத்தி வருகிறார்.

அதே நேரத்தில் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இவர் செயல்படுவதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன.

இதன் பேரில் இவர் மீது 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ஆஷா குமாரி. இவர் சேலத்தில் வசிக்கிறார். நேற்று முன்தினம் மகள், மருமகனுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீது ஒரு புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரில் சேலம் கோரிமேடு கொண்டப்பநாயக்கன்பட்டியில் எங்கள் வீடு உள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் சமூக ஆர்வலர் ஒப்பந்த அடிப்படையில் எங்கள் வீட்டில் குடியேறினார். பதினோரு மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.

கடந்த 2013 ஏப்ரல் மாதம் என் கணவர் இறந்ததால் சொந்த வீட்டில் குடியேற முடிவு செய்தோம்.

வீட்டை காலி செய்ய அறிவுறுத்தி 2018ல் நாங்கள் ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. ஆனால் அவர் காலி செய்ய மறுத்ததுடன் எங்களை மிரட்டினார்.

ஆகஸ்ட் முதல் மூன்று மாத வாடகை தராமல் போக்கு காட்டினார். வாடகை கேட்டு போனபோது அனுமதியின்றி கட்டடம் கட்டி முன்புறத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து ஷெட் அமைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன்.

முதல்வர் தனிப்பிரிவு பிரதமர் வரை புகார் அனுப்பினேன். உதவி கமிஷனர் அழைத்து நிலுவைத் தொகையை வசூலித்து கொடுத்து சிவில் பிரச்சனையில் தலையிட முடியாது என ஒதுங்கிக் கொண்டார்.

கடந்த 2019 மே மாதம் முதல் இதுவரை வாடகை தரவில்லை. நேற்று முன்தினம் வீட்டுக்குச் சென்று காலி செய்யுமாறு கூறினேன்.

அவர் முடியாது உன்னால் முடிந்ததை செய் என்று கூறி என்னை தாக்கி தள்ளி விட்டார் என்று அவர் புகார் கூறியிருந்தார்.

சேலத்தில் முகாமிட்டுள்ள முதல்வர் எடப்பாடி இடம் நேற்று மாலை அவர் புகார் வழங்கினார். இதையடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் பியூஸ் மானுஷ் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே