பத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்…

பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் நிரந்தரக் கணக்கு எண்ணை (PAN) இணையம் வாயிலாக பெறும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கி வைத்துள்ளார்.

ஆதார் எண்ணையும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணையும் வைத்திருக்கும் நிரந்தரக் கணக்கு எண் விண்ணப்பதாரர்களுக்கு இந்த வசதி தற்போது கிடைக்கும்.

காகிதமில்லா முறையில் இணையம் வாயிலாக செய்யப்படும் இந்த ஒதுக்கீடு மூலம், மின்-நிரந்தக் கணக்கு எண் (e-PAN) விண்ணப்பதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் நிரந்தரக் கணக்கு எண்ணை பெறும் வசதி விரைவில் தொடங்கப்படும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

“நிரந்தரக் கணக்கு எண் ஒதுக்கீட்டை மேலும் எளிமைப்படுத்தும் விதத்தில், விரிவான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் தேவை இல்லாமலேயே, ஆதாரின் அடிப்படையில் உடனடியாக நிரந்தரக் கணக்கு எண்ணை இணையத்தில் ஒதுக்கீடு செய்யும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்” என்று நிதி நிலை அறிக்கை உரையின்போது நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆதார் சார்ந்த மின்-கே.ஒய்.சி (e-KYC) என்கிற வாடிக்கையாளர் தகவல்களை அறிந்துகொள்ளும் முறை மூலம் தற்போது உடனடி நிரந்தரக் கணக்கு எண் பெறும் இந்த வசதி நேற்று முறைப்படித் தொடங்கப்பட்டது.

ஆனால், இதன் ‘மாதிரிப் பதிப்பு’ சோதனை முறையில் வருமான வரித் துறையின் இணையதளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு மார்ச் மாதம் வரை 6,77,680 நிரந்தர கணக்கு எண்கள் ஒவ்வொன்றும் பத்தே நிமிடங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறையின் இணையவழி வரித்தாக்கல் இணையதளத்திற்கு சென்று “Get New PAN” என்ற தெரிவை சொடுக்கிவிட்டு, உங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள்.

அடுத்தடுத்த படிநிலைகளில், ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ள அலைபேசி எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.

அதை சரியாக பூர்த்தி செய்ததும், உங்களது ஆதாரில் உள்ள தனிப்பட்ட விவரங்கள் திரையில் காட்டப்படும்.

அந்த விவரங்களுக்கு நீங்கள் ஒப்புதல் தெரிவித்ததும், அடுத்த படிநிலையில் விருப்பம் இருப்பின் மின்னஞ்சல் முகவரியை பதிவிட்டு அதை உறுதி செய்து கொள்ளலாம்.

இந்த செயல்முறை முடிந்ததும், 15 இலக்க ஒப்புதல் எண் (Acknowledgment number) ஒன்று விண்ணப்பிப்பவருக்கு தரப்படும்.

இந்த எண்ணை பயன்படுத்தி இ-பான் கார்டை அதே தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது விண்ணப்பத்தின் நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் அட்டையுடன் மின்னஞ்சல் முகவரி இணைக்கப்பட்டிருந்தால், மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பதாரருக்கு இ-பான் அனுப்பப்படும்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே