ஐஐடி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி கேட்டு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் அமைப்பினர் சென்னை ஐஐடி நுழைவாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.ஏ.முதலாம் ஆண்டு படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 8-ம் தேதி ஐ.ஐ.டி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .

தனது துறையில் இணைப் பேராசிரியராக உள்ள சுதர்சன் பத்மநாபன் தான் தனது மரணத்திற்குக் காரணம் என்று பாத்திமா தனது தற்கொலைக் குறிப்பை கைப்பேசியில் பதிவிட்டுள்ளதாக அவரது தந்தை கேரள முதல்வர் மற்றும் பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மாணவியின் தந்தை அனுப்பிய கடிதத்தை தமிழக முதல்வருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து ஐஐடியில் உள்ள 4 பேராசிரியர்களிடமும், மாணவி பாத்திமா லத்தீப் உடன் படிக்கும் மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாத்திமா லத்தீப் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் அமைப்பினர் ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாத்திமா லத்தீப்புக்கு நீதி வேண்டும்; அவர் மரணத்துக்கு காரணமானவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டுமெனவும்; இது போன்ற மரணங்கள் இனி வரக்கூடிய காலங்களில் ஐ.ஐ.டி.யில் நிகழாமல் அரசு தடுத்திட வேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே