பாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு

பாகிஸ்தானில்,கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இந்து மருத்துவ மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். 

சிந்து மாகாணத்துக்கு உட்பட்ட கோட்கி பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவி நம்ரிதா சாந்தனி என்பவர், இன்று விடுதி அறையில் கழுத்தை சுற்றி துப்பட்டா இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதனை கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசார் தற்கொலை என தெரிவித்துள்ளனர்.

ஆனால், மாணவியின் சகோதரரும், மருத்துவ ஆலோசகருமான விஷால் சுந்தர் என்பவர் தனது சகோதரி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், சாந்தனியின் கழுத்தை சுற்றிலும் மின்கேபிளால் இறுக்கப்பட்ட அச்சு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தனது சகோதரி புத்திசாலி என்பதோடு, அவளுக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை எனவும் கூறியுள்ளார். தாங்கள் இந்து சிறுபான்மையின பிரிவை சார்ந்தவர்கள் என்பதால், சகோதரியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க மக்கள் உதவ முன்வரவேண்டும் என்று கோரியுள்ளார்.

அண்மையில் கோட்டாக்கி பகுதியில் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த பள்ளி முதல்வர் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி, கோட்கி பகுதியில் உள்ள கோவில் உள்ளிட்ட இடங்கள் சூறையாடப்பட்டன.

மேலும் சிந்து மாகாணத்தில், ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் அதிகமான இந்து பெண்கள் கடத்தி மதமாற்றம் செய்யப்படுகின்றனர். தற்போது இந்த மாணவியின் மரணத்திலும் அவர் மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டாரா?? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே