இந்திய பொருளாதாரம் உறுதியாக உள்ளது – பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரம் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிரதமர் தனது உரையை தொடங்கியவுடன் காந்தி காந்தி என எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர்.

அப்போது மகாத்மா காந்தி உங்களுக்கு டிரெய்லராக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு உயிர்மூச்சு என பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதிய இந்தியாவுக்கான தொலைநோக்கு திட்டங்கள் குடியசுத்தலைவர் உரையில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்.

குடியரசுத்தலைவரின் உரை நாட்டின் எதிர்கால திசைவழியை உணர்த்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசு இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன் என எதிர்க்கட்சிகள் வினவுகின்றன.

  • பழைய பாதையிலேயே அரசு செயல்பட்டிருந்தால், 370வது பிரிவு நீக்கப்பட்டிருக்காது.
  • முத்தலாக் தடைச்சட்டம் இஸ்லாமிய பெண்கள் அவதிப்பட்டு கொண்டிருப்பர்.
  • ராமர் கோயில் கட்டுவது விவாதப் பொருளாகவே தொடர்ந்திருக்கும் என்ற பிரதமர் மோடி, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

காங்கிரசின் கருத்துகளுடன் பயணித்திருந்தால், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் வந்திருக்காது.

ராமர் கோவில் இன்றும் விவாதப் பொருளாக மட்டுமே தொடர்ந்திருக்கும்.

பல ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரதமர், தற்போது வடகிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகள் நலனுக்காகவும், விவசாயத்தை மேம்படுத்தவும் தனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பல மாநில அரசுகள் அரசியல் காரணமாக விவசாயிகளுக்கான திட்டங்களை தடுப்பதாக குற்றம்சாட்டிய பிரதமர், அரசியலை கைவிட்டு விவசாயிகள் நலனுக்காக அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரதன்மையோடு இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்தியா மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கூறிய பிரதமர், பொருளாதார வளர்ச்சிக்கான ஆலோசனைகளை தெரிவிக்குமாறும் அவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இங்கு அனைவருக்கும் நான் சொல்லி கொள்கிறேன். பொருளாதாரம் குறித்து விவாதிக்க அனைவரையும் நான் அழைக்கிறேன். நாட்டுக்கு பயனுள்ள கருத்துகளை அனைவரும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நல்ல ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

பிரதமர் மோடியின் உரையின் போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குறுக்கிட முயன்றார்.

அப்போது பேசிய பிரதமர், ராகுல் காந்தியை டியூப்லைட் என மறைமுகமாக விமர்சித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்ற முழக்கம் தற்போது எழுப்பப்படுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, அவசரநிலை பிரகடனத்தின் போதும், மாநில அரசுகளை கலைத்த போதும் இதனை மறந்து போனார்களா? என கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தானின் சிறுபான்மையினருக்கு ஜவஹர்லால் நேரு ஆதரவு தெரிவித்ததாக குறிப்பிட்ட மோடி, நேரு மதவாதியா என்றும், அவர் இந்து ராஷ்டிரத்தை அமைக்க விரும்பினாரா? என்றும் வினவினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே