வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் 6 மாதம் நிறைவு – விவசாயிகள் கருப்பு தினம் அனுசரிப்பு..!!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்றுடன் ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ளது. அதனைக் குறிப்பிடும் வகையில் இன்றைய தினத்தை (மே 26) கருப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதுமுள்ள மக்கள் அனைவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது.

இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்பதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் இந்த போராட்டம் 6 மாதங்களை நிறைவுசெய்வதைக் குறிக்கும் வகையில் இன்று கருப்பு தினமாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட சம்யுக்த கிஸான் மோர்ச்சா சங்கம் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தது.

அதனைத் தொடர்ந்து இன்று கருப்பு தினமாக அனுசரித்து நாடுமுழுவதும் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கருப்புக் கொடியுடன், கருப்பு டர்பன் அணிந்து எல்லைகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றர். விவசாயிகளில் இந்த போராட்டத்திற்கு ஏராளமான அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே