கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கன்னியாகுமரி..!!

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 13 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அரபிக் கடலில் டவ்தே புயல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தொடங்கியது. தற்போது வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் கனமழையால் வயல்வெளிகள் குளம்போல் காட்சி அளிக்கின்றன. கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 பாசன குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன. ஏராளமான வாழைகள் நாசமாகின. கோட்டார் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தொடர் கனமழையால் கீழ புத்தேரி நெடுங்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு வீரமங்கலம் செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ராஜாக்கமங்கலத்தில் பெய்த கனமழையால் நிழற்குடை இடிந்து விழுந்துள்ளது. பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கனமழையால் கோணம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே