ரஜினிகாந்த் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

பெரியார் பற்றிய கருத்தால் நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார்.

அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால், இந்த பேச்சு விவாதத்திற்குரிய பொருளானது.

இதனிடையே, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் வீட்டை முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் செம்மொழி பூங்கா அருகே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

மன்னிப்பு கேட்கும் வரை ரஜினிக்கு எதிரான போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரித்தனர்.

பதற்றம் காரணமாக போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வீட்டை சுற்றி 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, பெரியார் பற்றி ரஜினி அவதூறாக பேசியதாக திராவிடர் விடுதலை கழகம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி, அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்கும் வகையில் ரஜினி பேசியதாகவும், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் நேருதாஸ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதேபோல் நேற்றைய தினம் திராவிடர் விடுதலை கழகத்தின் உமாபதி தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வர உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே