தொல்லை கொடுக்கும் பேய்… தப்பிக்க முயலும் நாயகன் – மைக்கேல்பட்டி ராஜா விமர்சனம்

நடிகர்நிகேஷ் ராம்
நடிகைபெர்லின்
இயக்குனர்எஸ்.பிரான்சிஸ்
இசைசுதீப், அஷ்வமித்திரா
ஓளிப்பதிவுமனோஜ் பிள்ளை

மைக்கேல்பட்டியில் இருக்கும் நிகேஷ் ராம், ஊரில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்பதால் அப்பா சுந்தர்ராஜனின் கோபத்துக்கு ஆளாகிறார். தவறே செய்ய முடியாத நாட்டுக்கு அனுப்புகிறேன் என்று சுந்தர்ராஜன் அவரை அரபு நாட்டுக்கு அனுப்புகிறார். 
அங்கே வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் எடுக்கும் நிகேஷ் ராமை, ஒரு பேய் தொல்லை செய்கிறது. யார் அந்த பேய்? நிகேஷ் ராமுக்கும் அந்த பேய்க்கும் என்ன தொடர்பு? என்பதை கலகலப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

நாயகனாக நிகேஷ் ராம் காதல், பாசம், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டிய கதாபாத்திரம். ஊரில் இருக்கும்போது இயல்பாக வருபவர், அரபு நாட்டுக்கு சென்ற பிறகு காமெடியில் அசத்துகிறார். தம்பி ராமய்யா, மொட்ட ராஜேந்திரன், அம்பானி சங்கருடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது. 
அரபு அழகு பதுமையாக வரும் பெர்லின் தமிழுக்கு நல்ல வரவு. கதையின் திருப்புமுனை பாத்திரம் என்பதை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். 
தம்பி ராமய்யா, கோவை சரளா, ஆர்.சுந்தர்ராஜன், ரவி மரியா, மொட்ட ராஜேந்திரன் என கதாபாத்திர தேர்விலேயே கலகலப்பாக்கி விட்டார் இயக்குனர் பிரான்சிஸ். கலகலப்பான குடும்ப படமாக அமைந்துள்ளது. அரபு நாட்டுக்கு சுற்றுலா சென்ற திருப்தி, காட்சிகளில் ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் உணர்வுபூர்வமாக முடித்துள்ளார்கள்.

சுதீப், அஷ்வமித்திரா கூட்டணியின் இசை, கமர்சியல் படத்துக்கான இசையை அளித்துள்ளது. மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவில் மைக்கேல்பட்டி கிராமத்தின் பசுமை, அரபு நாட்டின் செழுமை இரண்டுமே சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. பாலைவன காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன. ராஜா முகம்மதுவின் படத்தொகுப்பும் கச்சிதம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே