புதுப்பொலிவுடன் இயக்கப்பட்ட நீராவி என்ஜின் ரயில்!

சென்னையில் இயக்கப்பட்ட பழமையான நீராவி எஞ்சின் ரயில் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்தியாவிலேயே மிகவும் பழமைவாய்ந்தது “இஐஆர்21” என்று அழைக்கப்படும் நீராவி ரயில் எஞ்சின். இது 1855-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, இந்திய ரயில்வே-யில் 55 ஆண்டுகள் சேவையாற்றியது.

1909-ம் ஆண்டில் ஓய்வுபெற்ற இந்த இன்ஜின், ஜமால்பூர் ரயில்வே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

101 ஆண்டுகளுக்குப் பிறகு, நீராவி ரயில் எஞ்சின் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஓரிரு முறை இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டும் சென்னை எழும்பூர் – கோடம்பாக்கம் இடையே நேற்று இரண்டு முறை இயக்கப்பட்டது.

எஞ்சினுடன் ஒரு பெட்டி மட்டும் இணைக்கப்பட்டது. இந்திய ரயில்வே வாரிய குழு உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் கொடியசைத்து அதனைத் தொடங்கிவைத்தார்.

வெளிநாட்டினருக்கு மட்டுமே இயக்கப்பட்ட இந்த ரயிலில் பயணம் மேற்கொள்ள ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.

மேலும், உணவு மற்றும் பாரம்பரிய ரயில் நினைவுப்பரிசுகளுக்கு தனித்தனி கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்த ரயிலில் வெளிநாட்டினர் 80 பேர் பயணம் மேற்கொண்டனர்.

நீராவி எஞ்சின் ரயில் பயணம் பரவசமாக இருந்ததாகக் கூறுகின்றனர் பயணிகள்.

இந்த ரயிலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் உள்நாட்டுப் பயணிகளுக்காக இந்த ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே