பெருங்கடலை விழுங்கும் பிளாஸ்டிக்!

கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் பேராபத்துகள் விலைக்கு வாங்கப்படுகின்றன; பிளாஸ்டிக் பொருட்களால் கடலும் கடல் சார்ந்த உயிரினங்களும் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

2050-ம் ஆண்டில் உலக கடற்பரப்பில் மீன்களை விட பிளாஸ்டிக் பொருட்களே அதிகமாக காணப்படும் என்றால் நம்ப முடியுமா..?? ஆம். உலகம் அதை நோக்கி தான் சென்று கொண்டிருப்பதாக சர்வதேச பொளாதார மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எண்ணற்ற கடல் வளங்களை தன்னுள் கொண்டு இயற்கையின் அவதாரமாக திகழும் கடல் தான் உலகின் 71 சதவீத பரப்பளவை நிரப்பியுள்ளது.

வெறும் 29 சதவீத நிலப்பரப்பில் வாழும் மனிதர்கள் 71 சதவீத கடற்பரப்பை பிளாஸ்டிக்கை கொண்டு நிரப்பினால் உலகம் என்னவாகும்..?

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் கடற்கரையில் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் அலையில் அடித்து வரப்படும் காட்சியே அதற்கு சாட்சி.!

DURBAN PLASTIC

ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு லாரி பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொட்டுவதற்குச் சமம்.

அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள் ஆறுகள் ஊடாகவே கடலில் கலக்கின்றன.

எந்த வித சிந்தனையுமின்றி நாம் தூக்கி வீசும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களை காவு வாங்குவதோடு, கடல் மீன்களை உட்கொள்ளும் நமக்கே மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

பிளாஸ்டிக் கழிவுகள் அப்படியே கடலில் மிதப்பது அல்ல. ஒருசில பிளாஸ்டிக்குகள் நுண் துகள்களாக மாறிவிடுகின்றன.

SINGLE USE PLASTIC

இதனை உட்கொள்வதால் 800 வகையான கடல் வாழ் உயிரினங்கள் அழிகின்றன.

கலிஃபோர்னியா – ஹவாய் இடையேயான கடற்பரப்பில் உள்ள பிளாஸ்டிக் நுண் கழிவுகள் மட்டும் லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி, நியூயார்க் நகரங்களை விட ஏழு மடங்கு அதிகம்.

ஆமைகள், திமிங்கலங்கள் முதல் கடற்பரப்பு மேல் பறக்கும் பறவைகள் வரை பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்ளுவதால் தொண்டைகள் மற்றும் வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக்குகள் சிக்கி உயிரிழக்கின்றன.

அண்மையில் ஸ்காட்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்திற்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது அதன் வயிற்றில் இருந்து 100 கிலோ எடைக்கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

திமிங்கலத்தின் உயிரிழப்புக்கு வயிற்றுப் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தின.

உலக வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து வருவது ஒருப்பக்கம் இருந்தாலும், கடலும் கடல் சார்ந்த வளங்களும் பிளாஸ்டிக் எனும் குண்டுகளால் நாள்தோறும் துளைக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கு அரசும், தொண்டு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகின்றன.

இருப்பினும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி விட்டு தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கண்ணுக்குத் தெரியாத பல உயிர்கள் ஆபத்தில் மூழ்குகின்றன.

என்ன தான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு முடிந்தளவு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து இயற்கை வளங்களை பாதுகாப்பதே மனிதர்களின் தார்மீக பொறுப்பு!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே