கடலில் 12 மணிநேரத்திற்கும் மேலாக தத்தளித்த தமிழக மீனவருக்கு உதவிய இலங்கை கடற்படை

கடலில் 12 மணிநேரத்திற்கும் மேலாக தத்தளித்த தமிழக மீனவருக்கு இலங்கை கடலோர காவல்படையினர், லைஃப் ஜாக்கெட் கொடுத்து உதவியுள்ளனர்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரையிலிருந்து, விசைப்படகில் ஏழு பேர் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மீன் பிடித்து பிறகு கரை திரும்பும் வழியில், படகிலிருந்து சின்னப்பன் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்துள்ளார். படகிலிருந்த சக மீனவர்கள் அவரை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனிடையே, அப்போது, அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், சின்னப்பனை படகில் ஏறிக்கொள்ளுமாறு கூறியதாகவும், ஆனால், படகில் ஏறினால், தன்னை கைது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர் படகில் ஏற மறுத்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, இலங்கை கடற்படையினர் லைஃப் ஜாக்கெட்டை சின்னப்பனுக்கு கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

லைஃப் ஜாக்கெட்டை மாட்டிக் கொண்டு கடலில் மிதந்து கொண்டிருந்த சின்னப்பனை, அந்த வழியாக வந்த இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு பத்திரமாக கோடியக்கரை கடற்கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இது மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே