கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு ரமலான் நோன்புக்கான ஸ்பெஷல் மெனு!

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நோன்புக்கு முன்பும், பின்பும் சத்தான உணவுகளை கொடுக்குமாறு தெலங்கானா அரசு அறிவுறுத்தியுள்ளது.

ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தெலங்கானாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு நோன்புக்காக சத்தான உணவு வழங்குமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சிகிச்சை பெற்று வரும் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு இதுதொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் சிகிச்சை அளிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு காலையில் ரொட்டி, சாதம், பருப்பு வழங்கப்படும் என்றும், காலை 3:30 மணிக்கு உணவுகள் பரிமாறப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

இதே போல் குறிப்பிட்ட நாட்களில் சிக்கன் அல்லது மட்டனும் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

நோன்புக்கு பிறகு கிச்சடி, வெஜிடபிள் பிரியாணி, சிக்கன் வறுவல், பருப்பு, முட்டை உள்ளிட்டவைகளை மெனுவில் சேர்த்துள்ளனர்.

நோன்பு மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் கிடைப்பதற்காக இந்த ஸ்பெஷல் மெனு தயாரிக்கப்பட்டுள்ளது. 

சத்தான உணவுகள் மூலம் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவும்.

கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் தினமும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பழங்கள், முந்திரி, பாதாம் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் ஊட்டச்சத்துக்காக நோயாளிகளுக்கு கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே