மகள்களை கொண்டு உழுத விவசாயி – உதவி செய்ய முன்வந்த நடிகர் சோனு சூட்

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக உருவெடுத்த சோனு சூட், ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு வாகனங்கள் ஏற்பாடு செய்தார்.

தற்போது கஷ்டத்தில் உள்ள பலருக்கும் உதவிக்கரம் நீட்ட ஆரம்பித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வெளியாகும் பல வீடியோக்களை ஷேர் செய்து கடந்து செல்பவர்கள் மத்தியில், சோனு சூட் ஒருபடி மேலே சென்று, கஷ்டப்படுபவர்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் தக்காளி விவசாயி ஒருவர், கொரோனா பாதிப்பால் பொருளாதார நெருக்கடியால் சிரமப்பட்டு வந்துள்ளார்.

உழுவதற்கு, எருதுகளை வாடகைக்கு எடுக்கும் அளவிற்கு அவரிடம் பணம் இல்லை. அதனால் உழவுக்காக தனது மகள்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

அவரது மகள்கள் வயலில் கலப்பையை இழுத்துக் கொண்டு நிலத்தை உழும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த வீடியோ கலவையான விமர்சனங்களை பெறத் தொடங்கியது. அவர்களது ஏழ்மை நிலைமையை நினைத்து பலரும் வேதனை தெரிவித்தனர்.

தனது தந்தையின் நிலையை அறிந்து உதவி செய்த மகள்களை பாராட்டினர். ஒரு சிலர் இது மிகவும் கொடூரமான செயல் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களது தந்தையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே இந்த காட்சியை சமூக வலைதளங்களில் பார்த்த நடிகர் சோனு சூட், விவசாயியின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்துள்ளார்.

முன்னதாக இன்று காலை இந்த சம்பவம் தொடர்பாக ட்வீட் செய்திருந்த சோனு சூட், ‘நாளை காலை அவர்களது வீட்டில் ஒரு ஜோடி எருதுகள் இருக்கும் என்றும், பெண்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்தட்டும் என்றும் பதிவிட்டிருந்தார்.

விவசாயிகள் நாட்டின் பெருமை என்றும் பாராட்டியிருந்தார். இந்நிலையில் அவர் தனது முடிவை மாற்றி மீண்டும் ஒரு ட்வீட் செய்துள்ளார்.

அதில், ‘இந்தக் குடும்பம் ஒரு ஜோடி எருதுக்கு தகுதியானவர்கள் கிடையாது. அவர்கள் டிராக்டருக்கு தகுதியானவர்கள். அதனால் உங்கள் வயலை உழுவதற்கு டிராக்டர் ஒன்றை அனுப்பி வைக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சோனு சூட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவர் மீது உள்ள மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மக்களின் நலனுக்காக போராடும் சோனு சூட் மற்றும் அவரது குழுவினரின் சேவை இணையற்றது என நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே