கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்

கால்நடை துறை உள்ளிட்ட 7 துறைகளின் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் தொடங்கி வைத்தார். அதில் கால்நடைகளுக்கான அவசர ஊர்தித் திட்டமும் தொடங்கப்படுகிறது.

கால்நடைகளுக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சை அளிப்பதற்காக திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாமக்கல், மதுரை மாவட்டங்களுக்கு தலா 2 ஆம்புலன்ஸ்கள் கடந்த 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

இந்த திட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் விதமாக, 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 22 இலவச அவசர கால்நடை மருத்துவ ஊர்திகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

முன்னதாக தலைமைச்செயலகம் வந்த முதலமைச்சரிடம், அவசர ஊர்தியில் உள்ள சிறப்பு அம்சங்களை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் விளக்கி கூறினர்.

கால்நடை வளர்ப்போர் இந்த ஆம்புலன்ஸ் சேவையைப் பெற 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

பெயர், தெளிவான முகவரி, கால்நடைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆகியவை குறித்து முழுமையான தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை பொறுத்து உரிய ஆலோசனைகள் வழங்கப்படும் அல்லது அந்தந்த மாவட்டத்தில் உள்ள அவசர ஊர்திகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.

ஆடு, மாடுகள் கன்று ஈன இயலாமை, கருப்பை வெளித் தள்ளுதல், விஷ செடிகளை உட்கொண்டதால் ஏற்படும் பிரச்சினை, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் தீண்டியதால் ஏற்படும் பாதிப்புகள், விபத்துகளால் ஏற்படும் காயம் உள்ளிட்டவற்றிற்கு கால்நடைகளின் இருப்பிடத்துக்கே நேரடியாகச் சென்று இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த வாகனத்தில் குளிர்சாதன வசதி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர், ஜெனரேட்டர், மாடுகளை படுத்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ எடுத்துச் செல்ல வசதியாக ஹைட்ராலிக் லிப்ட் மற்றும் அவசர கால சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் அனைத்து உபகரணங்கள், மருந்துகள் உள்ளன.

பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மேல் சிகிச்சை தேவை என மருத்துவர் கருதினால், கால்நடையை அதே வாகனத்தில் கொண்டு சென்று அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் சேர்த்து தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே