சூரரைப் போற்று படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழு டீசர் ரிலீஸ் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காப்பான் படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று.
இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் டீசருக்காக ஸ்பெஷல் தீம் மியூசிக் ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும், சூர்யா தனது சொந்தக் குரலில் ரேப் பாடல் ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
இதனால் படத்தின் டீசருக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் புத்தாண்டையொட்டி செகண்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி படத்தின் டீசர் வரும் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.