நடிகர் சூரியின் ரூ. 2.7 கோடி பண மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரிக்கை..!!

நடிகர் சூரியிடம் 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தாக்கல் செய்த மனு மீது 8 வாரங்களில் பதில் அளிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த ‘வீர தீர சூரன்’ என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார்.

இதற்காக வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தைத் தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வுபெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா இருவரும் கூறியுள்ளனர்.

அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து ரூ.2.70 கோடியைக் கூடுதலாகப் பெற்று மோசடி செய்துவிட்டதாகக் காவல்துறையில் நடிகர் சூரி புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவலா, மற்றும் அன்புவேல் ராஜன் மீது பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ரவீந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.

பின்னர் மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 8 வாரங்களில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையைத் தள்ளிவைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே