தனுஷின் பட்டாஸ் – சினிமா விமர்சனம்..!

கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இரண்டாவது முறையாக தனுஷை பட்டாஸ் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவைத்துள்ளார்.

தனுஷ் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளிவந்திருக்கும் படம் பட்டாஸ்.

அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார். புதுப்பேட்டை படத்துக்குப் பின் 13 ஆண்டுகள் கழித்து தனுஷ் – சினேகா ஜோடி இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

மகன் தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்ஜதா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு விவேக் – மெர்வின் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.

பொழுதுபோக்கு திரைப்படமாக வெளிவந்திருக்கும் இந்தப் படத்தில் தற்காப்பு கலை குறித்தும் பேசப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியான பட்டாஸ் படத்தைப் பார்த்த ரசிகர்கள், படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதி இரண்டும் ரசிக்கும் வண்ணம் இருப்பதாகவும், படத்தில் இடம்பெற்றுள்ள பிளாஷ்பேக் கதைக்கு வலு சேர்த்திருப்பதாகவும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

வழக்கம்போல் தனக்கு கொடுத்த கதாபாத்திரங்களை தனுஷ் சிறப்பாக கையாண்டிருப்பதாக தெரிவித்திருக்கும் நெட்டிசன்கள், சினேகாவின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் நகைச்சுவைக் காட்சிகளும் ரசிக்கும்படி அமைந்துள்ளதாக முதல் காட்சி படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

பட்டாஸ் படம் பார்த்த பலரும் ரசிகர்களாக இருப்பதால் படம் குறித்த பாசிட்டிவ்வான கருத்துக்கள் மட்டுமே ட்விட்டரில் காணக்கிடைக்கிறது. அதில் ரசிகர்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்ட படமாக அமைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

பட்டாஸ் திரைப்படத்தின் முதல்நாள் முதல்காட்சியை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா, நாயகி மெஹ்ரின் உடன் திரையரங்கில் கண்டுகளித்தார்.

கதை :

பட்டாஸ் என்கிற மகன் தனுஷ் நண்பர்களுடன் சேர்ந்து சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு எதிர்வீட்டில் இருக்கும் மெஹ்ரீன் செய்யும் நக்கல் பிடிக்காமல் அவர் வேலை பார்க்கும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் இருக்கும் பதக்கங்கள், கேடயங்களை திருடுகிறார்.

இதனால் மெஹ்ரீனுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

இதையடுத்து மெஹ்ரீன் மீது பாவப்பட்டு குத்துச் சண்டை பயிற்சி மையத்தில் இருக்கும் அவரின் சான்றிதழ்களை திருடச் செல்கிறார் தனுஷ்.

இதற்கிடையே கொலை வழக்கில் சிறையில் இருந்த சினேகா வெளியே வந்ததும் நேராக வில்லன் நவீனை கொலை செய்ய குத்துச் சண்டை பயிற்சி மையத்திற்கு வருகிறார்.

வந்த இடத்தில், தான் இறந்ததாக நினைத்த மகன் தனுஷ் உயிருடன் இருப்பதை பார்க்கிறார்.

மகன் தனுஷ் அடிமுறைக் கலையில் வல்லவரான தன் தந்தை தனுஷ் பற்றி தெரிந்து கொள்கிறார். இதையடுத்து தந்தையை கொன்றவரை பழிவாங்க கிளம்புகிறார்.

அப்பா, மகன் கதாபாத்திரங்களில் தனுஷ் அம்சமாக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அப்பா திரவியம். சினேகா கன்னியாகுமரியாகவே வாழ்ந்துள்ளார். கலக்கப்போவது யாரு சதீஷின் காமெடி நம்மை சிரிக்க வைக்கிறது. அவர் கவுண்ட்டர் கொடுப்பது தான் சிறப்பு.

எதையும் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் பட்டாஸாகவும், பாரம்பரியமான திரவியமாகவும் தனுஷ் அனைவரையும் ஈர்க்கிறார்.

மெஹ்ரீன் பிர்சாதா முதல் பாதியில் சொதப்பலோ சொதப்பல். இன்னும் பயிற்சி தேவை.

விவேக்-மெர்வின் இசை படத்திற்கு பக்கபலம்.

கதை ரொம்ப பழசு. நடப்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. இது தான் கதையின் மைனஸ்.

அடிமுறைக் கலையை அப்படியே காட்டாமல் மாஸாக காட்ட நினைத்து சொதப்பியுள்ளார் துரை செந்தில் குமார்.

பட்டாஸ் புஷ்வானம் ஆகிவிட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே