சிவகாசி அருகே குருமூர்த்திநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

கம்பி மத்தாப்பு தயாரிக்கும்போது இந்த வெடி விபத்து ஏற்பட்டது. வெடிவிபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகாசி, சாத்தூர், விருதுநகர் உள்பட அதனை ஒட்டியுள்ள பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.

ஆனால் இந்த பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து பல தொழிலாளர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

கடந்த மாதம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏழு மாத கர்ப்பிணிப் பெண் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.

இந்த சோகம் மறைவதற்குள் மேலும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு ஒருவர் இறந்தார்.

இந்த நிலையில் சிவகாசி அருகே குருமூர்த்திநாயக்கன்பட்டி என்ற பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் கம்பி மத்தாப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் தீயில் கருகி படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே