ரயில் நிலையங்களில் உள்ள குறைகளை களைய அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை – சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி..!!

பெரும்பாலான ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடை இறுதியில், தண்டவாளத்தைக் கடக்கும் முதியவர்கள் உட்பட பயணிகள் உள்ளிட்டோருக்குத் தண்டவாளங்களைக் கடப்பதற்கான வசதியைச் செய்து கொடுக்காமல் தண்டவாளத்தைக் கடக்கும்போது ஏற்படும் விபத்துகளில் பலியானவர்களுக்கு இழப்பீட்டையும் வழங்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ரயில் பயணத்தின்போது தவறி விழுந்து பலியான கோவில்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் கண்ணன் மற்றும் ஆவடியைச் சேர்ந்த ஓட்டுநர் பிரகாசம் ஆகியோரின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இரு குடும்பத்தினருக்கும் தலா 8 லட்ச ரூபாயை 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும், அவரது உத்தரவில், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள சேவைக் குறைபாடுகள் குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ரயில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை, கரப்பான் பூச்சி, எலி போன்றவற்றால் பயணிகள் உடல்நலக் குறைவுக்கு ஆளாகின்றனர்.

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாதோரும் பயணிப்பதாகவும், ஓடும் ரயில்களில் கதவுகள் மூடப்படுவது இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

‘பெரும்பாலான ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடை இறுதியில், ரயில்வே ஊழியர்கள், பயணிகள், மூத்த குடிமக்கள் சக்கர நாற்காலியில் செல்பவர்கள் என பல தரப்பினரும், சுமைகளுடன் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர்.

தண்டவாளங்களைக் கடப்பதற்கான முறையான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் தண்டவாளத்தைக் கடக்கும்போது ஏற்படும் விபத்துகளில் பலியானவர்களுக்கு இழப்பீட்டை வழங்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றும் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தக் குறைபாடுகளையும், விதிமீறல்களையும் களைய ரயில்வே ஊழியர்களும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் அக்கறையும் செலுத்தவோ, பொறுப்பேற்பதோ இல்லை எனவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே