நாய்கள் கடித்தும், பிளாஸ்டிக்கை உண்டதாலும் கடந்த 5 ஆண்டுகளில் சென்னையில் மட்டும் 497 புள்ளிமான்கள் உயிரிழந்துள்ளதாக தமிழக வனத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை நகரில் இருக்கும் மான்களை பிடிக்கவும், அவற்றை வேறு இடத்திற்கு மாற்றவும் தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் வனத்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதில் வனத்துறையின் முதன்மை வனப்பாதுகாவலர் சஞ்சய்குமார் ஸ்ரீவஸ்தவா நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் சென்னை ராஜ்பவன், ஐடி வளாகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகங்களை விட்டு மான்கள் வெளியே வரும் போது அவற்றை நாய்கள் கடிப்பதாகவும், உணவோடு சேர்த்து பிளாஸ்டிக்கை விழுங்கியும், வாகனங்கள் மோதியும் மான்கள் உயிரிழந்து விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 ஆண்டுகளில் மட்டும் சென்னையில் சுமார் 497 புள்ளிமான்கள் இறந்துள்ளதால், நகர வளர்ச்சி காரணமாக மான்கள் வாழ தகுந்த சூழலுக்கு அவற்றை இடமாற்றுவது மிக அவசியமானது எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.