தான் இந்து என்பதால் தன்னுடன் பேச விரும்பாத வீரர்களின் பெயரை வெளியிட உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்த தனிஷ் கனேரியா, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.
தனிஷ் கனோரியா 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 18 ஆட்டங்களில் 15 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளில் 1000-க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், தனிஷ் கனேரியா இந்து என்பதால் அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட பாகிஸ்தான் வீரர்கள் விரும்பியதில்லை என்று தெரிவித்திருந்தார்.
இருப்பினும் அந்த வீரர்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய திறமைசாலி கனேரியா என்றும் சோயிப் குறிப்பிட்டார்.
தானிஷ் கனேரியா சூதாட்டப்புகாரில் சிக்கி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தனிஷ் கனேரியா, உண்மையை அக்தர் கூறியிருப்பதாகவும், தன்னுடன் பேச விரும்பாத வீரர்களின் பெயரை வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேச முன்பெல்லாம் தைரியம் இல்லாத நிலையில், தற்போது தன்னால் முடியும் என்றும் கனேரியா தெரிவித்துள்ளார்.