தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு 5 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டமாக நடைபெறுகிறது.
முதல்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி கடந்த 16ம் தேதி நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியல் படி 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 156 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறு விறுப்பாக நடந்து வருகிறது.
260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37,830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் 1.28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தபட்டுள்ளன.
ஒரு வாக்குச்சாவடிக்கு 7 முதல் 8 அலுவலர்கள் வீதம் 2 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
தேர்தல் நடைபெறும் இடங்களில் 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கி ஓட்டுப்போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, பொதுமக்கள் டோக்கன் மூலம் இரவு 7 மணி வரை வாக்களிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு 5 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 158 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.