குடியுரிமை மசோதாவில் உரிய திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் சிவசேனா ஏற்காது – உத்தவ்தாக்கரே

மக்களவையில் நிறைவேறிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை, அதே வடிவத்தில் சிவசேனா ஏற்காது என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் இந்த மசோதாவில், உரிய திருத்தங்கள் செய்யப்படாவிட்டால், அதனை மாநிலங்களவையில் சிவசேனா ஆதரிக்காது என தெரிவித்தார்.

இந்த மசோதா நிறைவேற்றப்படுவது இந்தியாவில் வசிக்கும் யாருக்காவது அச்சத்தை ஏற்படுத்தினால் அதுதொடர்பாக விளக்கமளிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார். 

மேலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பவர்கள், தேச துரோகிகள் என்ற மாயை உருவாக்கப்படுவதாகவும், சிவசேனா குறிப்பிட்ட திருத்தங்களை மசோதாவில் செய்தால் மட்டுமே அதற்கு மாநிலங்களவையில் ஆதரவு தெரிவிக்கப்படும் என்றும் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்தார். 

மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பின் போது சிவசேனா கட்சியின் 17 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில், தற்போது அக்கட்சி திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் நிர்பந்தமே இதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே