விடுதலை சிறுத்தைகள் கட்சி கோட்டையில் ஒருநாள் கொடியேற்றும் : திருமாவளவன் சூளுரை

70 வயது வரை அரிதாரம் பூசி ஆட்சி அதிகாரத்தில் அமர விரும்புபவர்கள் இருக்கும்போது, விடுதலை சிறுத்தைகள் ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்று திருச்சியில் நடைபெற்ற தேசம் காப்போம் பேரணியில் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றை செயல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமையில் திருச்சியில் பேரணி நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பேரணிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், குடியுரிமை திருத்த சட்டம்  இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் எதிரானது என்று தெரிவித்தார்.

பாஜக அரசியல் கட்சியே அல்ல என்று கூறிய திருமாவளவன், ஆர்எஸ்எஸ் அமைப்பு அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கப் பார்ப்பதாக குற்றம்சாட்டினார். 

70 வயது வரை அரிதாரம் பூசி ஆட்சி அதிகாரத்தில் அமர நினைப்பவர்கள் இருக்கும்போது, 30 ஆண்டுகாலம் மக்களுக்கு தொண்டாற்றிய விடுதலை சிறுத்தைகள் ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.

கூலிக்கு மாரடிக்கும் கும்பலாகவும், வெறும் கோஷம் போடும் கும்பலாகவும் விடுதலை சிறுத்தைகள் இருப்பார்கள் என கனவு காண வேண்டாம் என்று கூறிய திருமாவளவன், கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்று சூளுரைத்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே