ஷங்கர் – ரன்வீர் சிங் இணையும் ‘அந்நியன்’ ரீமேக்?

ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ள இந்திப் படம் ‘அந்நியன்’ ரீமேக் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தொடங்கும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்துக்குப் பின் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷங்கர். தில் ராஜு தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது. பெரும் பொருட்செலவில் அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த இரண்டு படங்களுக்குப் பின், ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை இயக்கவுள்ளார் ஷங்கர். இதற்கான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படம், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியாகி, மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அந்நியன்’ படத்தின் ரீமேக் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

‘அந்நியன்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றவுடன், ரீமேக் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்தச் சமயத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இறுதி பெறவில்லை. தற்போது தொடங்கியுள்ள ‘அந்நியன்’ இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக ‘முதல்வன்’ படத்தை இந்தியில் ‘நாயக்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார் ஷங்கர். அதற்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்திப் படமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே