பிகில் கதை – வழக்கு தொடர அனுமதி

பிகில் படத்திற்கு காப்புரிமை கேட்டு உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குனர் செல்வாவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிகில் பட கதைக்கு காப்புரிமை, தடை கேட்டு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் உதவி இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடுத்தார்.

இந்த விசாரணையின்போது செல்வா தன் கதையை பதிவு செய்வதற்கு முன்பே பிகில் பட கதை எழுதி முடிக்கப்பட்டதாகவும், விளம்பரம், பணம் பறிக்கும் நோக்கில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் அட்லீ மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக செல்வா தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மீண்டும் இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை நாட கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து காப்புரிமை கேட்டு மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் அட்லீ தரப்பு மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் மனுவை திரும்பப் பெற உரிமையியல் நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு அதிருப்தி தெரிவித்தார்.

மேலும் காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குனர் செல்வதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே