புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு; புதிதாக 81 பேர் பாதிப்பு

புதுச்சேரியில் புதிதாக 81 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (மார்ச் 18) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1,353 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 62 பேருக்கும், காரைக்காலில் 12 பேருக்கும், மாஹேவில் 7 பேருக்கும் என மொத்தம் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் மருத்துவமனைகளில் 125 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 151 பேரும் என 276 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், காரைக்கால் டி.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி தொற்று பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 674 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது.

இன்று புதிதாக 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 251 (97.80 சதவீதம்) ஆக உள்ளது.

புதுச்சேரியில் 6 லட்சத்து 49 ஆயிரத்து 639 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 6 லட்சத்து 3 ஆயிரத்து 214 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. இதுவரை 16 ஆயிரத்து 297 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும், 5 ஆயிரத்து 897 முன்களப் பணியாளர்களுக்கும், 13 ஆயிரத்து 401 பொதுமக்களுக்கும் என 35 ஆயிரத்து 595 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புதுச்சேரியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கரோனாவின் தாக்கம் குறைந்து காணப்பட்ட நிலையில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள் பலரும் முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடி வருகின்றனர். தற்போது, மீண்டும் கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தம் செய்வது உள்ளிட்டவற்றைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே