காரில் வைத்து இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்..!!

3 இளைஞர்கள், ஒரு பெண்ணுக்கு ஓடும் காரில் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது.. இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம், தமிழகத்தின் தலைநகரில் நடந்துள்ளது.

இன்று அதிகாலை 3 மணி இருக்கும்.. சென்னை நுங்கம்பாக்கத்தில் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் வள்ளுவர் கோட்டம் அருகே வந்தபோது, காருக்குள் இருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அந்த பெண், நீண்ட நேரமாகவே காரில் கூச்சலிட்டு வந்ததாக தெரிகிறது.. இதனால் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக இதை பற்றி போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்..

போலீசாரும், இலங்கை தூதரகம் முன்பு போய்கொண்டிருந்த அந்த காரை, விரட்டி மடக்கி பிடித்தனர்.. அப்போது காருக்குள் 3 இளைஞர்களும் ஒரு பெண்ணும் இருந்துள்ளனர்… இதில் ஒருவர் கார் ஓட்டி வந்துள்ளார்.. இன்னொருவர் முன்பக்கம் சீட்டிலும், மற்றொருவர் பின்பக்க சீட்டிலும் உட்கார்ந்திருந்தனர்.. பின்பக்க சீட்டில் அவர்களுடன் ஒரு இளம்பெண்ணும் இருந்துள்ளார்.

இதையடுத்து, காரில் இருந்த 3 இளைஞர்களையும் விசாரிப்பதற்காக கீழே இறங்குமாறு போலீசார் சொல்லி உள்ளனர்.. அப்போதுதான், பின்பக்க சீட்டில் உட்கார்ந்திருந்த பெண் மதுபோதையில் இருந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.. அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த இளைஞர்தான், பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார் என்பதும், அதனால் அவர்களை இந்த பெண் செருப்பால் அடித்ததும் தெரியவந்தது..

இறுதியில், அந்த பெண்ணையும் காரை விட்டு இறங்கும்படி போலீசார் சொன்னார்கள்.. அப்போது போலீசாரிடம் பெண் ரகளையில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார்.. இதனை தொடர்ந்து பெண்ணை போலீசார் சமாதானம் செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்… அதேபோல 3 இளைஞர்களையும் ஸ்டேஷனுக்கு விசாரிப்பதற்காக அழைத்து சென்றனர்.. இந்த விசாரணையில் முதல்கட்டமாக சில தகவல்களும் வெளியாகி உள்ளன.. அந்த பெண்ணுக்கு 23 வயதாகிறதாம்..

அந்த இளைஞர்களில் 2 பேர், அந்த பெண்ணிற்கு ஏற்கனவே தெரிந்தவர்கள்தானாம்.. நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு நேற்றிரவு சென்றுள்ளார் அந்த இளம்பெண்.. இன்று காலை 3 மணிக்குதான் ஹோட்டலை விட்டு வெளியே வந்திருக்கிறார்.. அப்போது துரைப்பாக்கத்தை சேர்ந்த கௌதம், தீபக், சக்தி ஆகியோர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.. ஆனால், காரில் எதற்காக அந்த பெண் சத்தம் போட்டு அலறினார் என்ற விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது..

ஒருவேளை பாலியல் ரீதியான தொந்தரவு தரப்பட்டதா? அல்லது இளம்பெண்ணை 3 இளைஞர்களும் சேர்ந்து கடத்த முயன்றனரா? என்ற பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது… 4 பேருமே அளவுக்கு அதிகமாக மது போதையில் இருப்பதால், அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது… தொடர் விசாரணை அவர்களிடமும் நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே