விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் தங்கராஜ் பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.

நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.

வழக்கம்போல் இன்றும் இந்த பட்டாசு ஆலையில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு அறையில் பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் போது உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின.

இந்நிலையில், சிவகாசி காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் இன்று மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

பேன்ஸி ரக பட்டாசு செய்யும் அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியதால் விபத்து பகுதி தீயணைப்பு வீரர்கள் நெருங்கமுடியாத அளவுக்கு உள்ளது.

40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என அஞ்சப்படுகிறது.

இதுவரை 14 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவருக்கு 80 சதவீதத்துக்கும் மேல் காயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 12-ம் தேதி சாத்தூர் அச்சங்குளம் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 23 பேர் பலியாகினர்.

அந்த விபத்து ஏற்படுத்திய சோகம் விலகுவதற்குள் மற்றுமொரு விபத்து நடந்துள்ளது.

அதிகாரிகள் ஆய்வு:

சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

பட்டாசு ஆலைக்கு உரிமம் இருப்பதாகத் தெரிவித்துள்ள எஸ்.பி., ஆலை உரிமம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறதா, ஆலையில் விதிமீறல் ஏதும் உள்ளதா போன்ற விசாரணைகள் நடைபெறுவதாகக் கூறினார்.

நீதிமன்றம் உத்தரவு:

முன்னதாக இன்று பிற்பகல், தமிழகத்தில் பட்டாசு தொழிலை முறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே