குடும்ப அரசியலுக்கு எதிரானது பாஜக மட்டுமே – ஜே.பி.நட்டா

“தமிழகத்தில் தி.மு.க.,வில் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் பல வருடங்களாக உள்ளது தான். நாம் குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுகிறோம். பா.ஜ., குடும்ப அரசியலுக்கு எதிரானது,” என்று பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.

திருப்பூர் பல்லடம் ரோடு லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: சிறந்த கலாச்சாரம் கொண்ட தமிழக செயற்குழுவில் பங்கேற்றதில் பெருமையடைகிறேன். திருப்பூர் பல சுதந்திர போராட்ட வீரர்களை கொண்டது. திருப்பூர் குமரனை நினைவுகூர்கிறோம்.

சுதந்திரத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த வ.உ.சி., போன்றோர் உள்ளனர்.தமிழகத்தில் தி.மு.க.,வில் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் பல வருடங்களாக உள்ளது தான். நாம் குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுகிறோம். பா.ஜ., குடும்ப அரசியலுக்கு எதிரானது.முன்னேற்றம் மற்றும் தமிழக மக்கள் நலனுக்கானது பா.ஜ., மட்டுமே.தி.மு.க., தமிழக கலாச்சாரத்தை, பண்டிகையை மாற்ற முயல்கிறது.கொரோனா காலத்தில் பக்தர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காமல் செய்தது தி.மு.க., அரசு. பா.ஜ.,வினர் போராட்டத்திற்கு பின்னர் தான் கோவிலுக்குள் அனுமதித்தது.

வெற்றிவேல் யாத்திரையை தடுக்க பார்த்த தலைவர்கள் எல்லாம் இப்போது வேலோடு போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். தமிழக வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும், பா.ஜ., துணை நிற்கும்.தமிழை உலக அரங்கிற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார்.கொரோனா தொற்று உச்சம் தொட்ட போது 9 மாத காலத்தில் தீவிரமாக செயல்பட்டு தடுப்பூசி மூலம் அதை ஒழித்தவர் மோடி. லட்சக்கணக்கான உயிர்களை பாதுகாத்தார். எதிர்கட்சிகள் அதை மோடி ஊசி, பா.ஜ., ஊசி என பயமுறுத்தி பிரச்சாரம் செய்தன.இந்தியாவில் 108 கோடி பேருக்கு மேல் இன்று தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

விவசாய மேலான்மைக்கு பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 5,990 கோடிருபாய் பிரதான் கிஷான் திட்டத்திற்காக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளார். தி.மு.க., கொடுத்த வாக்குறுதிப்படி குறைத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.கொரோனா தொற்றின்போது உணவு, மருந்து இல்லாமல் யாரும் இருக்க கூடாது என பா.ஜ.,வினர் உழைத்தனர். ஆனால், அப்போது தி.மு.க.,வினர் தங்களை தனிமைப்படுத்திகொண்டனர். இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே