நெல்லை கண்ணன் கைது குறித்து சீமான் கண்டனம்..!!

நெல்லை கண்ணன் கைது தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பெருத்த அவமானம் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அறச்சீற்றத்தை வெளிப்படுத்திய தமிழ்க்கடல் அப்பா நெல்லை கண்ணன் அவர்களைக் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் ஒருசேர கட்டவிழ்த்துவிடப்பட்டு மக்கள் துயருற்று நிற்கும்போது அம்மக்கள் பக்கம் நின்று அவர்களின் உரிமைக்காகக் குரலெழுப்புவதே அறம்.

அந்நெறிப்படி நின்று போராடிய அப்பா நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

மக்களின் எண்ணவோட்டத்தைப் பிரதிபலித்த அவரின் பேச்சை வன்முறையைத் தூண்டுவதாக உள்நோக்கம் கற்பிப்பது மடமைத்தனமானது.

தமிழுக்குத் தொண்டாற்றுவதையே தனது அருந்தவப் பயனென வாழ்ந்து வரும் அப்பா நெல்லை கண்ணன் அவர்களைச் சிறைப்படுத்துவது தமிழுக்கும், தமிழருக்கும் நேர்ந்த பெருத்த அவமானம்.

எனவே, அவர் மீது புனையப்பட்ட வழக்குகளை ரத்துச் செய்து உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இல்லாவிடில், தமிழ்ப்பெருந்தொண்டாற்றிய அப்பா நெல்லை கண்ணன் அவர்களைச் சிலர் திருப்திக்காக உடல் நலம் குன்றியிருக்கும் பொழுது சிறைப்படுத்தியதற்குத் தமிழர்களின் கடும் வன்மத்தையும், வரலாற்றுப் பெரும் பழியைச் சுமக்க நேரிடும் எனத் தமிழக அரசை எச்சரிக்கிறேன் என்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே