நெல்லை கண்ணனின் கைதில் தமிழக அரசுக்கு எந்த வித உள்நோக்கமும் இல்லை

நெல்லைகண்ணனின் கைதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பற்றிய அவரது பேச்சின் ஆழம் பார்த்தே நெல்லைகண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

இதற்கு முன்பு எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தபோது கைது செய்யப்படாது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அவர்களின் பேச்சு பொதுவாக இருந்ததாகவும் வன்முறையை தூண்டும் வகையில் இல்லை என்று கூறினார்.

கல்லூரிக்குள் குண்டு வீசப்படும் என்று எச்.ராஜா கூறிய கருத்து தொடர்பாக உரியவர்கள் புகார் அளித்தால் அது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக பாமகவுடன் கூட்டணி வைத்ததால்தான் ஆட்சியில் இருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அது நான்கு சுவற்றுக்குள் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்புமணி பேசியதாகவும்; எனவே அது குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்த இந்த விவகாரத்தை சிலர் கையில் எடுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய ஜெயக்குமார் பாமக அதிமுக கூட்டணி உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே