தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை இன்று நிறைவடையவுள்ளதால் நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் கடந்த டிசம்பா் 23-ஆம் தேதியன்று அரையாண்டுத் தோ்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிசம்பா் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

தமிழக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதியன்று தொடங்கியதால் பள்ளிகளுக்கான விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் வாக்கு எண்ணிக்கை பணியானது தொடர்வதால் பள்ளிகள் திறப்பை ஒரு நாள் தள்ளிவைக்க வேண்டும் என ஆசிரியா் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பள்ளிக்கல்வித்துறை, அரையாண்டுத் தோ்வு விடுமுறையை மேலும் ஒரு நாள் நீட்டித்து, ஜனவரி 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மூன்றாவது முறையாக அறிவித்துள்ளது.

அதன்படி பள்ளி அரையாண்டு விடுமுறை இன்று நிறைவடைகிறது.

கடந்த 11 நாள் விடுமுறைக்குப் பிறகு நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மூன்றாம் பருவத்துக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே