நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்க்கும் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு மாநில அளவில் மட்டும் நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்கிறோம்; நீட் தேர்வு நடத்த வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்தியதாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

மத்திய கல்வி அமைச்சருடன் இன்று மாநில கல்வி அமைச்சர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

இன்று சி.பி.எஸ்.இ தொடர்பாகத்தான் விவாதிக்கப்பட்டது. ஜே.இ.இ., ஐசிஆர் (அக்ரி படிப்பு) ஆகிய தேர்வுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் மற்றும் விவசாய கல்லூரிகளுக்குதான் நடத்தப்படும் என்கிறது மத்திய அரசு.

ஆனால் நீட் தேர்வு என்பது அனைத்து மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கும் நடத்தப்படும் என்கிறது.

இதனை குறிப்பிட்டு, எப்படி மத்திய அரசின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி, விவசாய கல்லூரிகளுக்கு ஜே.இ.இ, ஐ.சிஆர். தேர்வுகள் நடத்துவது போல மத்திய அரசின் கீழ் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வு நடத்திக் கொள்ளுங்கள்.

ஆனால் மாநிலங்களின் கீழ் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு முதலில் நடத்தப்பட்டதைப் போல மாநில அளவில் நுழைவுத் தேர்வு நடத்தலாம் என கோரிக்கை வைத்திருக்கிறோம்.

அந்த கோரிக்கை எந்த அளவுக்கு ஏற்கப்படும் என்பது போகப் போகத்தான் தெரியும். புதிய கல்வி கொள்கையை நாங்கள் ஏற்கப் போவது இல்லை ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டோம்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறுகையில், பிளஸ் டூ தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும். மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே