விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு..

விழுப்புரம் அருகே முன்பகை விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட, பத்தாம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ (15). அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

இவரின் பெற்றோர் நேற்று வெளியூருக்குச் சென்று விட்ட நிலையில் ஜெயஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் அவளது வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்றபோது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் ஜெயஸ்ரீ வலியால் அலறினார்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு வந்த விழுப்புரம் நீதிபதியிடம், மாணவி தனது வீட்டுக்குள் அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் முருகன் (51), கந்தசாமி மகன் யாசகம் என்கிற கலியபெருமாள் (60) ஆகியோர் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து ஜெயஸ்ரீ மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முருகன், யாசகம் என்கிற கலியபெருமாள் ஆகிய 2 பேரை நேற்று இரவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

95 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் மாணவி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட, நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாணவியின் தந்தைக்கும், கைதான முருகன் தரப்புக்கும் ஏற்கனவே இருந்த முன்பகையே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவியின் சித்தப்பா, ஏற்கனவே வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கு நடந்துவருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்புக்கும் மோதல் அடிக்கடி நடந்துவந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மாணவி எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே