அந்த கொடுமையான நாளை யாராலும் மறந்திருக்க முடியாது.
கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004-ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி பள்ளி நடந்து கொண்டிருந்தபோதே தீ விபத்து ஏற்பட்டது.
பள்ளியின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த குடிசையில் தீ பற்றியது. பள்ளியின் படிக்கட்டுகள் குறுகியிருந்ததால் தீயில் சிக்கி தப்பிக்க முடியாமல் 94 பிஞ்சுகள் தீயில் கருகி கரிக்கட்டைகளாகினர்.
அந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. தனியார் பள்ளியின் லாபவெறி அலட்சியத்தால் பல லட்சிய கனவுகளுடன் பிள்ளைகளை வளர்த்தப் பெற்றோர்கள் உருக்குலைந்து போனார்கள்.
அன்றில் இருந்து இன்றுவரை அவர்கள் மீளாத துயரத்தில் தவித்து வருகின்றனர். 16 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் அந்த ரணம் ஏற்படுத்திய வடுவும், வலியும் மாறாமல் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் பிள்ளைகளை பறிக்கொடுத்தவர்கள் கடும் துயரத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.
கொரோனா ஊரடங்கு காலத்திலும் இன்று பொதுமக்களும் பெற்றோரும், பள்ளியின் நினைவு வளாகத்தில் மலர்களைத்துாவியும், குழந்தைகளின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மெழுகுவர்த்தி ஏந்தியும் குழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகைகளை வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.